பேளுக்குறிச்சி அருகே 44 பவுன் நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை சேந்தமங்கலம் கோர்ட்டு தீர்ப்பு

பேளுக்குறிச்சி அருகே 44 பவுன் நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை சேந்தமங்கலம் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2022-11-04 18:45 GMT

சேந்தமங்கலம்:

பேளுக்குறிச்சி அருகே 44 பவுன் நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேந்தமங்கலம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

44 பவுன் நகை திருட்டு

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 72). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்கு சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சரவணன் மனைவி மைதிலி என்பவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சென்றார். பின்னர் அவர்கள் ஜெயராமனை ஏமாற்றி வீட்டில் இருந்த 44 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதிலி உள்பட 7 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. இதற்கிடையே திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்ற மைதிலி பின்னர் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

கைது

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மைதிலிக்கு உதவிய 6 பேருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமறைவான மைதிலி மீது சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 36 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு திருட்டு தொடர்பாக போலீசார் மைதிலியை கைது செய்தனர். இதையறிந்த பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் சென்று மைதிலியை பேளுக்குறிச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிறையில் அடைப்பு

இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரன் மைதிலிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் மைதிலியை சேலத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்