ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.;

Update: 2022-06-26 19:39 GMT

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''புதிய கல்வி கொள்கை திட்டத்தின் சாரம்சங்களை எடுத்துக்கூறி நாம் எதற்காக எதிர்க்கிறோம் என்பதை எடுத்துக்கூறுகிறோம். தமிழகத்தில் மாநில கல்வி திட்டத்திற்காக 13 உறுப்பினர்களை கொண்ட குழுவை முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார். அந்த குழுவானது ஒருவருட காலத்திற்குள் அதன் கொள்கையை வடிவமைக்கும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் மேலாண்மை குழு மூலம் 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். உடனடியாக 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மீதமுள்ள ஆசிரியர்கள் அடுத்த ஆண்டிற்குள் நிரப்பப்படுவார்கள். இந்த பணியை நிரந்தரப்படுத்த கோருகிறார்கள். ஏற்கனவே ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் மதிப்பெண் குறைவால் தவறான முடிவை எடுக்கின்றனர். பொதுத்தேர்வில் முதல் தேர்ச்சி, 2-ம் தேர்ச்சி என தான் உள்ளது. இதில் தேர்ச்சி தோல்வி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் மனதை தளரவிடக்கூடாது என்பதற்காக தான் உயர்க்கல்வி கற்பதற்காக ஜூலை மாதமே உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. தவறான முடிவை கைவிடுவதற்காக மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் முதல் 5 நாட்கள் கவுன்சிலிங் கொடுக்கப்படும். பெற்றோர் தங்களது குழந்தையை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அழுத்தம் கொடுக்காதீர்கள்''. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்