தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்

திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-23 23:08 GMT

திருநின்றவூர்,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனி பகுதியில் ஏஞ்சல் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தாளாளரான வினோத் (வயது 34), பிளஸ்-2 படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகளின் பெற்றோரும், அந்த பகுதி பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடு பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் நின்றிருந்த அனைவரையும் பள்ளி வளாகத்துக்குள் செல்ல வைத்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

அப்போது அவர்கள், தாளாளர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறி பள்ளி வராண்டாவில் மாணவ-மாணவிகள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், ஆவடி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர்.

மாலை 3 மணிவரை பேச்சுவார்த்தை நீடித்தது. பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பள்ளியில் இருந்து கலைந்து சென்றனர்.

4 பிரிவுகளில் வழக்கு

இது தொடர்பாக திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ேமலும் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மற்ற வகுப்பு மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ேமலும் அந்த தனியார் பள்ளிக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் பெற்றோருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்