கீழடி அருங்காட்சியகத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
கூடுதலாக மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து கீழடி அருங்காட்சியகத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்
கூடுதலாக மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து கீழடி அருங்காட்சியகத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர், சிறப்பு செயலாக்க திட்டம் உதயச்சந்திரன் மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அரசு முதன்மை ெசயலாளர் உதயச்சந்திரன் கூறியதாவது:- சங்க கால தமிழர்கள் நகர நாகரிகத்துடன் 2,600 ஆண்டுக்கு முன்னதாகவே வாழ்ந்துள்ளனர் என்பதை உலக அளவில் அறியப்படுத்துகின்ற வகையிலும், தமிழர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையிலும், உலக அளவில் பல்வேறு நாடுகளும் தமிழகத்தை பார்த்து வியக்குகின்ற வகையிலும் தற்போது கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பி இருக்கிறது.
சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்களை உலக தமிழர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்கின்ற வகையில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடத்திட முதல்-அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டு, தற்போது 9-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணியையும் கடந்த 6-ந் தேதி தொடங்கி வைத்தார்.
கூடுதல் வசதிகள்
இந்த அருங்காட்சியகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அரசின் அறிவுரையின்படி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறைகள், சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அறைகள், அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட பொருட்களில், மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், கூடுதலாக காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தவும், வரலாற்று குறிப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கு கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்பதற்கும், இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இப்பகுதிகளை சேர்ந்தவர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சிகளை அவர்களுக்கு அளித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமான உணவு
வார இறுதி நாட்களில் தற்போது உள்ள நேரத்தைவிட கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரித்திடவும், பொதுமக்களின் வருகையை பொறுத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்திடவும், மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் இயங்கி வரும் சிற்றுண்டி உணவகத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கிடவும், அதற்கான விலைப்பட்டியலினை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் காட்சிப்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டட மையம் பாதுகாப்பு கோட்டம் (சென்னை) முதன்மை பொறியாளர் விஸ்வநாத், தலைமை பொறியாளர் (மதுரை மண்டலம்) சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் (சென்னை) மணிகண்டன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.