'மெட்ரோ ரெயில் வருமானத்தைப் பார்க்கும் பிரதமர், பெண்களின் முன்னேற்றத்தை ஏன் பார்க்கவில்லை?' - செல்வப்பெருந்தகை
மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் வருமானத்தைப் பார்க்கும் பிரதமர் மோடி, பெண்களின் முன்னேற்றத்தைப் பார்க்கவில்லை என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் டெல்லியில் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவிப்பதால், மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதாக விமர்சித்தார்.
இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் வருமானத்தை பார்க்கும் பிரதமர் மோடி, பெண்களின் முன்னேற்றத்தை ஏன் பார்க்கவில்லை? என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"பா.ஜனதா கட்சி தென் மாநிலங்களில் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்குகளைப் பெறும். அதற்கு மேல் அவர்களால் வாக்கு பெற முடியாது. மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் வருமானத்தை பிரதமர் மோடி பார்க்கிறாரே தவிர, பெண்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி ஏன் அவர் பார்க்கவில்லை?"
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.