பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு அம்சங்கள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!
பிரதமர் மோடி வரும் 8-ந் தேதி சென்னை வருகிறார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் வர உள்ளார். ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு ஏப்ரல் 8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வந்தடைகிறார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை (முதல்பகுதி) பிரதமர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு மாலை 4மணி வருகிறார். அங்கு சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வர உள்ள நிலையில் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி-யிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.