செங்கோலை சாட்சியாக கொண்டு பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார்

திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை சாட்சியாக கொண்டு பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று திருக்கடையூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் அண்ணாமலை பேசினார்.

Update: 2023-06-29 18:45 GMT

திருக்கடையூர்:

திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை சாட்சியாக கொண்டு பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று திருக்கடையூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் அண்ணாமலை பேசினார்.

பா.ஜ.க. பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க ெபாதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், வக்கீல் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி குருக்கள் வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மீனவர்களுக்கு வீடு

மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வழங்கப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு 3-வது முறையாக பிரதமர் நரந்திரமோடி மத்தியில் ஆட்சி அமைப்பார்.

நெல்லுக்கும், கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது. தி.மு.க. அரசு வழங்கவில்லை. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டித்தருவதாக கூறிய தமிழக அரசு இதுவரை ஒரு வீட்டை கூட கட்டிர்தரவில்லை.

முதல்-அமைச்சர் சந்தித்தார்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரை முதல் ஆளாக சென்று சந்தித்தது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காமல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக மத்தியில் ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல கடந்த 2½ ஆண்டுகளாக மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய தி.மு.க. ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் நடந்த போது மழை பெய்ததால் தொண்டர்கள் நனைந்தனர். உடனே அண்ணாமலை மேடையை விட்டு வெளியேறி மழையில் நனைந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அண்ணாமலை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்