பிரதமர் மோடி தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளார்
பிரதமர் மோடி தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளார் என்று இசையமைப்பாளர் தினா பேசினார்
நெமிலி
பனப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தமிழும், தமிழர் பண்பாடும் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பிரபல சினிமா இசையமைப்பாளரும், பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவருமான தினா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், தமிழ் மொழியானது மிகவும் தொன்மையானது. தற்போது புதிய நாடாளுமன்ற திறப்பின்போது தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும் பிரதமர் மோடி தமிழ் மீது மிகுந்த பற்று வைத்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் என்றார்.
இதில் நெமிலி ஒன்றிய பா.ஜ.க. தலைவர்கள் சுதாகர், சக்திவேல், சுந்தரமூர்த்தி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.