மருத்துவம், கல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு

மருத்துவம், கல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2023-06-24 20:45 GMT

அருப்புக்கோட்டை,


மருத்துவம், கல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

மருத்துவ முகாம்

அருப்புக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் பாவடிதோப்பில் நடைபெற்றது. மருத்துவ துணை இயக்குனர் யசோதா மணி வரவேற்றார். இணை இயக்குனர் சண்முகசுந்தரம், ஆர்.டி.ஓ. கணேசன் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கி வருகிறார். தொகுதி மக்களின் நிலை அறிந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக மாற்றி தற்போது ரூ.28 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

கடந்த காலங்களில் தீவிர சிகிச்சைக்காக மதுரை மற்றும் விருதுநகர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. அந்த சிரமம் இனிமேல் தொகுதி மக்களுக்கு இருக்காது.

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனை அறிந்து புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாலைப்பணிகள் முடிவடையும் போது போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும். ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 இடங்களில் அனைத்து சிகிச்சை முறைகளும் கிடைக்கக்கூடிய இதுபோன்று பன்னோக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் சசிகலா, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் மணி, நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்