முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டும்-முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் பிரிவினைவாதம் குறித்து ஆ.ராசா பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் பிரிவினைவாதம் குறித்து ஆ.ராசா பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
உண்ணாவிரதம்
தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சியில் பாரதிதாசன் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரிவினைவாதம்
தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சி தவறான ஆட்சியாக இருந்து கொண்டு இருக்கிறது. 47 ஆயிரம் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தோற்று போகிற அளவில் கல்வித்தரம் உள்ளது. தமிழை அந்த அளவுக்கு கற்று கொடுத்துள்ளார்கள். ஊழல் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்துள்ள மேடையிலேயே பிரிவனைவாதம் பேச முன்வந்துள்ளனர். தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் ஆ.ராசா பேசும்போது, அண்ணா வழியை பின்பற்றி கொண்டு இருக்கிறோம். பெரியார் வழியை பின்பற்றும் நிலைக்கு போக அனுமதிக்க வேண்டாம் என்று பேசி இருக்கிறார்.
1960-ம் ஆண்டுகளிலேயே பிரிவினை வாத எதிர்ப்பு சட்டம் வந்தபோது, அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்ற முழக்கத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு வந்தவர் அண்ணா. தற்போது 60 ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயத்தை கோடிட்டு காட்டி தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பேசினார் என்றால் 60 வருடத்துக்கு பின்னால் செல்ல போகிறார்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். இந்த கருத்து தி.மு.க.வின் கருத்தா?. தி.மு.க. ஆட்சியின் கருத்தா?. தமிழக முதல்-அமைச்சரின் கருத்தா? என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்.
சவாலை ஏற்க தயார்
முதல்-அமைச்சர் விளக்கம் சொல்ல தவறினால் பிரிவினைவாதத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் என்பது தான் பொருள். அப்படி ஒருவேளை தமிழகத்தை பிரிப்போம் என்று சொல்லி வந்தால் எந்தகாலமும் அனுமதிக்க மாட்டோம். அந்த சவாலை நீங்கள் முன்னிறுத்தினால் அதை ஏற்று கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பிரிவினைவாதம் குறித்து அவர்கள் பேசியதை 8 கோடி தமிழர்களும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பழைய திராவிட நாடு என்ற கொள்கையை நோக்கி தான் எங்கள் பயணத்தை தொடர்கிறோம் என்று தி.மு.க.வினர் கூறிவிட்டு தேர்தலை சந்திப்பார்களா?. ஒரு ஓட்டுக்கூட கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.