ராகுல்காந்தி நடைபயணத்தை முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்: கே.எஸ்.அழகிரி தகவல்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Update: 2022-08-28 23:11 GMT

சென்னை,

ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார். கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவிடத்தில் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் கன்னியாகுமரியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளும் 2 கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல்காந்தியோடு 10 நிமிடம் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளார்கள்.

அதன்படி, ராகுல்காந்தி தமிழகத்தில் இருக்கும் 4 நாட்களிலும் தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்களும் நடைபயணத்தில் பங்கேற்று ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த

இந்திய மக்களை பிரித்தாள நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். சனாதன சித்தாந்தத்தால் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசன சட்டத்திற்கும், அதில் முதன்முதலில் காமராஜரால் இடஒதுக்கீட்டுக்காக திருத்தம் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ராகுல்காந்தி மக்களிடம் எடுத்துரைக்க இருப்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம்.

மேலும் தவறான பொருளாதார கொள்கை, விவசாய கொள்கை, தாறுமாறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை, கருப்பு பணத்தை மீட்டு அனைத்து குடிமக்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறி இளைஞர்களை, பெண்களை திரட்ட, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ராகுல்காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

பழுத்த மட்டை கீழே விழும்

கண்பார்வையற்றோரும் ராகுல்காந்தியுடன் சிறிது தூரம் நடக்க இருக்கிறார்கள். மேலும், செப்டம்பர் 8-ந் தேதி நடைபயணம் தொடங்கும்போது குமரி அனந்தன் கதர் ஆடையை ராகுல்காந்திக்கு அணிவித்து வாழ்த்தி அனுப்பி வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு, பழுத்த மட்டை மரத்தில் இருந்து கீழே விழுவது இயற்கை. மரம் பழுத்து குலுங்குகிறபோதுதான் பறவைகள் இருக்கும். மரத்தில் இந்த சீசனில் பழம் இல்லாததால் சில பறவைகள் பறந்து செல்கின்றன என்று கே.எஸ்.அழகிரி பதில் அளித்தார்.

பேட்டியின் போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் கே.ராஜூ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்