ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஊட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஊட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்து உள்ளவாறு 1.7.2022-ந் தேதி முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் சுந்தரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், நிர்வாகி சஜி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பணி நியமன ஒப்புதல்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கு பள்ளி கல்வித்துறை உடனடியாக ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும். நடுநிலை பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன்பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.