ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். 1.7.2022 முதல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடன் வழங்கிட வேண்டும். பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு முன்பு போல் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை கல்வி மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் கல்வி மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் டேனியல் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.