திருவண்ணாமலையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சத்யபாமா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மனோகரன், வெங்கட்ராமன், தர்மதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை கல்வி மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையை கைவிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளுக்கும் கடந்த காலம் போல் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.