ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-29 21:12 GMT

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொடக்க கல்வி துறையில் முறைகேடாக, விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டு வருவதை கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவு-மறைவு இன்றி நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, கல்வி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் கீதா கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட்டணி சார்பில் சதீஷ்குமார், காளிராஜ், உயர்நிலை மேனிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயலாளர் பிச்சைக்கனி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சுதர்சன், சிவகுமார், மாணிக்கம், மாடசாமி உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மணிமேகலை ஆகியோர் விளக்க உரை யாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பவுல் அந்தோணி ராஜ், அய்யப்பன், ரவிச்சந்திரன், முருகேசன், ரவி, அருள்ராஜ், மணி பாரதி, மணிமாறன், பூரண ராஜா, கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்