தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.;

Update:2023-03-19 00:15 IST

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை செயலாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில முன்னாள் பொருளாளர் வில்சன் பர்னபாஸ், மாவட்ட செயலாளர் சிவன், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் முருகன் பேசினார்.

கோரிக்கை

போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்படாத இ.எம்.ஐ.எஸ் வலைதளத்தில் புள்ளிவிவரங்களை பதிவேற்றம் செய்வதால் ஆசிரியர்களின் கற்பித்தலில் இடையூறு ஏற்படுகிறது. இந்த பதிவேற்றம் செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீதம் உயர்கல்வி இடஒதுக்கீடு மற்றும் மூவலூர் ராமாமிர்தம் கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் போராட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி முடித்து வைத்து பேசினார். போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன் தங்ககுமார், பேச்சிமுத்து, ரெக்ஸலின் விண்ணரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்