ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

நெல்லை, வள்ளியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-30 20:05 GMT

நெல்லை, வள்ளியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நேற்று நெல்லை டவுன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் வெனிஸ்ராஜ் இக்னேஷியஸ், உஷா, துணை செயலாளர்கள் அகஸ்டின், உஷாமாலதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில தலைவர் மணிமேகலை, செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது நெல்லையில் கொட்டும் மழை பெய்தது. இதனால் மழையிலும் ஆசிரியர்கள் குடை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணையவழி ஆன்லைன் தேர்வுகளை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சுடலைமணி, அருள் மரிய ஜான், கல்வி மாவட்ட தலைவர்கள் சபரி கிரிநாதன், உமையொருபாகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர்கள் ராஜ்குமார், டேவிட் பொன்ராஜ், எபனேசர் தானிநாத் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார செயலாளர்கள் ஆஸ்டின் ஜெப சாலமோன், பால்முருகன், பாஸ்கர், சூ.ஜஸ்டின் கிளாடியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ், வள்ளியூர் கல்வி மாவட்ட தலைவர் ஜான் கென்னடி, செயலாளர் அமுதன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைச் செயலாளர் அருமை ஜெபஸ்டின் வரவேற்றார். நாங்குநேரி வட்டார பொருளாளர் அலெக்ஸ் சுனிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்