தொடக்கப் பள்ளி வகுப்புகள் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி வகுப்புகள் நேற்று தொடங்கின.

Update: 2023-06-14 18:45 GMT

நாகை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி வகுப்புகள் நேற்று தொடங்கின.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், ஜூன் 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக நாகை மாவட்ட பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சால்வை அணித்து வரவேற்பு

அதன்படி நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி வாசலில் நேற்று காலை ஆசிரியர்கள் நின்று மாணவ, மாணவிகளுக்கு சாக்லெட், பூக்கள் கொடுத்தனர். அப்போது தலைமை ஆசிரியர் இளமாறன், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 439 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று பெற்றோர் பலர் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி, நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். இதேபோல் வேதாரண்யம் அருகே அண்டர்காடு, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்