தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் திடீர் தர்ணா
ஜெயங்கொண்டம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் மணிகண்டன் என்பவர் கூட்டுறவு சங்க வாசலில் அமர்ந்து நேற்று திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், உட்கோட்டை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தற்போது செயலாளராக உள்ள செல்லதுரை தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு கடன் தர மறுப்பதுடன், விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன் தராமல் வேண்டுமென்றே அலைக்கழித்து வருகிறார் என்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர் அங்கிருந்து கலைந்து சென்றார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் செல்லதுரை கூறுகையில், 32 பேர் கொண்ட உறுப்பினர்களில் 15 பேர் மட்டுமே குழு பணம் செலுத்தியதாகவும், மீதமுள்ள உறுப்பினர்கள் செலுத்தவில்லை எனவும் குழு பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.