கார் கவிழ்ந்து பாதிரியார் பலி
தென்னிலை அருகே கார் கவிழ்ந்து பாதிரியார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.;
கார் கவிழ்ந்தது
தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் ஜோசப் செல்வராஜ் (வயது 61), சபரிநாதன் (62), ஜெரால்ட் (62), பிரபாகர் (51). இவர்கள் 4 பேரும் சர்ச் பாதிரியார்கள் ஆவர். இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூரில் இருந்து ஊட்டி நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பிரபாகரன் ஓட்டி சென்றார்.
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை அருகே எல்லை காட்டு வலசு பிரிவு அருகே ெசன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது.
பாதிரியார் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாதிரியார் ஜோசப் செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.