கோவில் வளாகத்தில் பூசாரி அரிவாளால் வெட்டிக்கொலை
கறம்பக்குடி அருகே கோவில் வளாகத்தில் பூசாரியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி:
கோவில் பூசாரி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பந்துவக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர், இங்குள்ள செல்லியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா மற்றும் கிடாய்வெட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் மண்டகப்படித்தாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கிடாய்வெட்டி பூஜை நடத்துவார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பூஜை நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவில் கோவில் பூசாரி கணேசன், அதே ஊரை சேர்ந்த அவரது அண்ணன் முத்தையாவின் மகன் சசிக்குமார் (30) என்பவரை அழைக்காமல் பூஜைகளில் பங்கேற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிக்குமார் அவரது சித்தப்பா கணேசன் மேல் ஆத்திரத்தில் இருந்து உள்ளார்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று இரவு கோவில் வளாகத்தில் கணேசன் மற்றும் நிர்வாகிகள் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள திருவிழா நிறைவு குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கையில் அரிவாளுடன் திடீரென கோவிலுக்குள் நுழைந்த சசிக்குமார் யாரும் எதிர்பாராத நிலையில் கணேசனின் கழுத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கணேசன் துடி துடித்து இறந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அச்சத்தில் அங்கிருந்து சிதறி ஓடினர். இதையடுத்து சசிக்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
போலீசில் சரண்
இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூசாரி கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தப்பியோடிய சசிக்குமார் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து கறம்பக்குடி அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கோவில் பூசாரியை அவரது அண்ணன் மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.