விலைவாசி விண்ணை முட்டுகிறது: மகளிருக்கு ரூ.1000 தருவது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது- செல்லூர் ராஜூ பேச்சு
தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. மகளிருக்கு ரூ.1000 தருவது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது என்று செல்லூர் ராஜூ பேசினார்.;
பொதுக்கூட்டம்
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதியால் கூட அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது மு.க.ஸ்டாலின், உதயநிதியால் எல்லாம் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. எங்களை ஆறுபடை முருகனான, ஆறுமுகம் கொண்ட எடப்பாடி பழனிசாமி எங்களை காத்து நிற்கிறார். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. அண்ணா தொடங்கிய தி.மு.க. என்ற கட்சி கருணாநிதி குடும்பத்திடம் சிக்கி கொண்டது. தி.மு.க.விற்காக எத்தனை பேர் உயிர் நீத்து இருக்கிறார்கள், சிறை சென்று இருக்கிறார்கள். ஆனால் கட்சிக்காக எதையும் செய்யாத உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவி கொடுக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த ஏராளமான நலத்திட்டங்களை தற்போது தி.மு.க. நிறுத்தி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் நான் 11 ஆண்டுகள் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். கூட்டுறவுத்துறை முதன்மை துறையாக இருந்தது. 28 விருது வாங்கி இருக்கிறோம். ஆனால் இன்று அந்த துறை பொலிவிழந்து விட்டது.
யானை பசிக்கு...
தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. வீட்டு வரி, மின்கட்டணம் உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்கள் விலை அதிகரித்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி இல்லாமல் சாம்பார் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தருகிறார்கள். விலைவாசி உயர்வு காரணமாக, இது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது. தி.மு.க. சிந்தித்து, சிந்தித்து கொள்ளை அடிக்கிறார்கள். டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10, ரூ.20 என கூடுதலாக வசூல் செய்கிறார்கள்.அந்த துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். எப்படி இருந்த அவர், இப்போது இப்படி ஆகி விட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவே கிடைக்காது. ஏனென்றால் மது குடிப்பவர்கள் சாபம் சும்மா விடுமா? 3 ஆயிரம் பார்கள் கணக்கில்லாமல் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.விற்கு எந்த காலத்திலும் ஓட்டு போடாதீர்கள். தேர்தலின் போது அவர்கள் வந்து ஆசைவார்த்தை சொல்வார்கள். அதில் ஏமாற வேண்டாம். இந்தியாவே மோடி என்றபோது, தமிழகத்தில் லேடி என்று முழங்கி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.