மிளகு விலை கிலோவுக்கு ரூ.83 அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் மிளகு விலை ஒரு கிலோவுக்கு ரூ.83 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-01 18:45 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் மிளகு விலை ஒரு கிலோவுக்கு ரூ.83 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மிளகு

நறுமணப் பயிர்களில் மிகமுக்கியமானது மிளகு ஆகும். கருப்புத் தங்கம் என வர்ணிக்கப்படும் மிளகு குமரி மாவட்டத்தில் நல்ல மிளகு, குறுமிளகு என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளாவைத் தாய் நிலமாகக் கொண்ட மிளகு, தற்போது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடியாகிறது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் தங்கலாம் என்ற முதுமொழியால் மிளகின் மருத்துவ குணத்தை அறிந்து கொள்ளலாம்.

மித வெப்ப காலநிலை

மிதவெப்ப கால நிலையை கொண்ட குமரி மாவட்டத்தில் பனச்சமூடு, களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், சுருளகோடு, பாலமோர், மாறாமலை, தடிக்காரன்கோணம், வேளிமலை, கரும்பாறை, முக்கடல் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளான ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், மோதிரமலை, தோட்டமலை, தச்சமலை, முகளியடிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1000 எக்டர் வரை மிளகு சாகுபடிசெய்யப்படுகிறது.

மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் மிளகு சாகுபடி செய்து கணிசமான அளவில் வருவாய் பெறுகின்றனர். மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் கரிமுண்டன் வகை மிளகும், சமவெளிப் பகுதிகளிள் பண்ணியூர் வகை மிளகும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

விலை உயர்வு

மிளகு பயிருக்கு நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் சீசன் காலங்களாகும். இக்காலங்களில் மிளகு முத்துகள் மிளகு கொடிகளிலிருந்து அறுவடை செய்யப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுத்தப்படுத்தப்பட்ட உலர்ந்த மிளகு கிலோவிற்கு ரூ.510 வரை விற்பனையானது. தற்போது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் இதன் விலை அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்றைய நிலவரப்படி சுத்தப்படுத்தப்பட்ட உலர்ந்த மிளகு கிேலாவுக்கு ரூ.83 அதிகரித்து ரூ.593 ஆக விற்கப்பட்டது. சுத்தப்படுத்தப்படாத உலர்ந்த மிளகு கிலோவிற்கு ரூ.573 ஆகவும், புதிய மிளகு கிலோவிற்கு ரூ.563 ஆகவும் விற்பனையானது.

மிளகின் விலை கிலோவிற்கு ரூ.83 அதிகரித்துள்ளதால் மிளகை உலர்த்தி இருப்பு வைத்து விற்பனை செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்