எலுமிச்சை பழம் விலை 2 மடங்கு உயர்வு

நாகையில் எலுமிச்சை பழத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-03-16 18:45 GMT

 நாகையில் எலுமிச்சை பழத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுட்ெடரிக்கும் வெயில்

நாகை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக மதிய நேரத்தில் மண்டையை பிளக்கும் படி அடிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம், இரவிலும் தென்படுவதால், மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாது நிலை உருவாகியுள்ளது.

கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

எலுமிச்சை பழம்

இந்த வெயிலில் இருந்து தங்களை தற்காத்துகொள்ள பொதுமக்கள் சர்பத், இளநீர், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனையும் படுஜேராக நடைபெற்று வருகிறது.

சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு எலுமிச்சை பழம் பயன்படுவதால் மற்ற காலங்களைவிட கோடைக்காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது.

2 மடங்கு விலை உயர்வு

பல்வேறு சிறப்புகளை கொண்ட எலுமிச்சை பழத்தின் விலை தற்போது விண்ணை தொடும் வகையில் 2 மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த மாதம் வரை ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி கடைகளிலும், தெருவோர கடைகளிலும் எலுமிச்சை பழத்தை தங்கம் போல் எடை போட்டு விற்பனை செய்கின்றனர்.

மேலும் அதிகரிக்க வாய்ப்பு

இதுகுறித்து எலுமிச்சைப்பழ வியாபாரிகள் கூறியதாவது:-

ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், திருச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் நாகை கடை தெருவுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதுதவிர பரவை சந்தையில் இருந்தும் நாட்டு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் எலுமிச்சைப்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சளைக்காமல் வாங்கி செல்கின்றனர்

வெயில் காலங்களில் சர்பத் போன்றவற்றை செய்வதற்காக கடைக்காரர்கள் கிலோ கணக்கில் எலுமிச்சை பழங்களை வாங்கி செல்வார்கள்.

பெரிய பழம் ஒன்று ரூ.10-க்கும், சிறிய பழங்கள் அடங்கிய ஒரு கூறு 40-க்கும் விற்கப்படுகிறது. விண்ணை தொடும் விலைக்கு விற்றாலும், அதை பொருட்படுத்தாமல் எலுமிச்சை பழத்தின் சிறப்பை அறிந்தவர்கள் சளைக்காமல் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்