மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.;
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராம பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களை கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
உணவுப்பொருட்களை...
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். பொது வினியோக திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்களை 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்கவும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீட்பு உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கவும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர்வாரவும், கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திடவும் உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மையம்
பாலங்களின் இருபுறமும் அடைப்புகளை சுத்தம் செய்திடவும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திடவும், தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை மாற்றி, பழுதடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகளை சரி செய்திடவும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், நிவாரண மையங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழையின்போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும், வாட்ஸ்-அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.