தோல் கழலை நோய் தடுப்பு நடவடிக்கைகள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தோல் கழலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-29 21:31 GMT

தோல் கழலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

தோல் கழலை நோய்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

குஜராத், மராட்டியம் மற்றும் வட இந்திய மாநிலங்களில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் இந்நோய் தொற்று ஈரோடு மாவட்டத்தில் பரவாமல் தடுத்திட தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் தொற்று அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றினை கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. ஈ, கொசு, உண்ணி மூலமாகவும், கறவையாளர்கள், கன்றுகுட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்துவதாலும் மற்றும் நோய் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து நோயற்ற பகுதிகளுக்கு கால்நடைகள் வந்து செல்வதாலும் இந்த நோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி வடிதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் கண்டு கண்டாக வீக்கம், கால்கள் வீங்குதல், உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சிறுகுறிஞ்சான் பொடி

இந்நோய்க்கு அறிகுறிக்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்கலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சை அளித்தால் மாட்டின் கறவை திறனை தக்க வைக்கலாம். இதற்கான தடுப்பூசி தற்போது இந்தியாவில் கிடையாது. தினசரி 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடி எடுத்து அதனுடன் வெல்லம் கலந்து கொடுத்து வந்தால் நோய்த்தொற்றின் பாதிப்பை தவிர்க்கலாம். மஞ்சள்தூள், கொழுந்து வேப்பிலை, வேப்ப எண்ணெய் இவை மூன்றையும் கலந்து காயங்களில் பூசலாம். காயங்களில் ஈ மொய்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொப்பரை தேங்காய்-1, வெல்லம் -100 கிராம், வெந்தயம் -50 கிராம், மஞ்சள்தூள்-30 கிராம் இவை அனைத்தையும் சேர்த்து தினமும் 2 வேளை கொடுத்து வந்தால் மாடுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலிருந்து தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும். சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் பாதித்த மாடுகளுக்கு தனியாக இருக்க வேண்டும். கறவையாளர் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை அனுக வேண்டும். ஈ மற்றும் கொசுக்களுக்கு மருந்து தெளிக்க வேண்டும். புண் மற்றும் கட்டிகள் சுத்தப்படுத்தப்பட்ட துணிகள் மற்றும் பஞ்சுகள், பாதிக்கப்பட்ட கால்நடையின் காய்ந்த திசுகள் ஆகியவற்றினை தீயினால் எரித்துவிட வேண்டும்.

இறப்பு விகிதம் குறைவு

இந்த நோய் தொற்றால் பால் உற்பத்தி தற்காலிகமாக குறையும். சினை பிடிப்பதில் பாதிப்புகள் தற்காலிகமாக ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும். இளம் சினைமாடுகளில் கருச்சிதைவும், சில மாடுகளில் மடிநோயும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வடமாநிலங்களில் பரவி வருவதால் நாம் பண்ணையளவில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுப்பது மூலம் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

சுத்தமான கொட்டகை, சுத்தமான கறவையாளர், சுத்தமான கால்நடைகள் இது மட்டுமே இந்த நோய் தொற்றிலிருந்து நம் கறவை மாடுகளை காப்பாற்றும். இந்த நோய் பாதித்த கால்நடைகளின் இறப்பு சதவீதம் மிகமிக குறைவு. மேலும் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரிகளை அனுகவும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்