2 நாள் பயணமாக ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார்.

Update: 2023-02-17 00:30 GMT

மதுரை,

திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறார்.

2 நாள் பயணமாக வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அவரது பயண விவரம் வருமாறு:-

பூரண கும்ப மரியாதை

தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் திரவுபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்கு பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து காரில் புறப்பட்டு, 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

பின்னர் கோவிலில் இருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுைரயில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார்.

கொரோனா பரிசோதனை

ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய பணியாளர்களுக்கும், மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கோவிலை பொறுத்தவரை அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை அளிப்பவர்கள், மேள-தாளம் வாசிப்பவர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர பாதுகாப்பு அதிகாரிகள், ேபாலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

இன்று ஒத்திகை

முன்ஏற்பாடாக ஜனாதிபதி நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடக்க இருக்கிறது. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் முதல் அனைவரும் இந்த ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஒத்திகை வாகன அணிவகுப்பு தொடங்குகிறது. வரும் வழித்தடத்தில் சற்று நேரம் போக்குவரத்தை நிறுத்தி இந்த ஒத்திக்கை பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை நகரம் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது.

கோவை

கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) மாலை, 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது. அங்கு ஆதியோகி சிலை மற்றும் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

விழாவில், தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரையில் இருந்து நாளை மாலை தனிவிமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

மகா சிவராத்திரி விழா

அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிகழ்ச்சி குறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, வெலிங்டன் ராணுவ மையத்தில் ஜனாதிபதி முர்மு கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் போரில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுதூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடைபெறுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் சென்று டெல்லி திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதைகள் குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிறப்பு எஸ்.பி. ஆய்வு

ஜனாதிபதி பாதுகாப்புக்கான சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் நேற்று கோவை வந்தார். அவர் ஜனாதிபதி செல்லும் அனைத்து வழிக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்