மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.2.16 கோடியில் நிர்வாக அலுவலகம் தயார்படுத்தும் பணி தொடங்கியது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.2.16 கோடியில் தற்காலிக நிர்வாக அலுவலகம் தயார்படுத்தும் பணி தொடங்கியது.
திருப்பரங்குன்றம்,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.2.16 கோடியில் தற்காலிக நிர்வாக அலுவலகம் தயார்படுத்தும் பணி தொடங்கியது.
அடிக்கல் நாட்டப்பட்டது
திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1264 கோடியில் உலக தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. தென்மாவட்ட மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2018-ல் டிசம்பர் மாதத்தில் மதுரையில் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக வாகனங்கள் போக்குவரத்து வசதிக்காக மத்தியசாலை திட்டத்தின் கீழ் ரூ.21.20 கோடியில் கூத்தியார்குண்டு மெயின் சாலை சந்திப்பில் இருந்து கரடிக்கல் வரை 250 மீட்டர் தூரம் 20 அடி ரோட்டை 60 அடி ரோடாக விரிவுப்படுத்தப்பட்டு புதியசாலை அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட 199.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடியில் அதிநவீன சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் தற்காலிகமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்காத நிலையே நீடித்து வருகிறது. இதனால் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
மதிப்பீடு திருத்தி அமைப்பு
ரூ.1264 கோடியில் மருத்துவமனை கட்டுவது என்று ஆரம்பகட்டத்தில்முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் ரூ.1977.80 கோடியில் கட்டுவது என்று மதிப்பீடு திருத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.1622.70 கோடி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிடம்(ஜெய்கா) கடன் வாயிலாகவும், மீதி, 18 சதவீத நிதியை மத்திய அரசு மூலமாகவும் திட்டத்தை செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு 2023-ம் ஆண்டில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு 2026-ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஆஸ்டின்பட்டியில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையின் ஒரு பழைய கட்டிடத்தினை தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக அலுவலகத்திற்கு என்று தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் மத்திய அரசின் பொதுப்பணி துறையின் கீழ் ரூ.2 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரத்து 487-க்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர், துனை இயக்குனர் கோட்டபொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், மற்றும் கூட்ட அரங்கம் என்று தனித்தனியாக அறைகள் மற்றும் மின் வசதி, குடிநீர் வசதிகளுடன் அதிநவீன முறையில் பழைய கட்டிடம் சீரமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணி தொடங்கி நடந்து வருகிறது.
காலரா வார்டு மாற்றம்
திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி ஆஸ்டின்பட்டியில் கடந்த 1960-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் அரசு நுரையீரல் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதில்காசநோய் பிரிவுக்கு 207 படுக்கைகள், அம்மை பிரிவுக்கு 50 படுக்கைகள், காலரா பிரிவுக்கு 28 படுக்கைகள் என்று மொத்தம் 285 படுக்கைகள் கொண்டு 3 மருத்துவமனைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக வார்டுகள் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்திற்காக 28 படுக்கைகள் கொண்டு செயல்பட்டு வந்த காலரா வார்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அலுவகத்திற்காக காலரா வார்டு இடிக்கப்பட்டு அதிநவீனமாக சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை 6 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சிலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.