தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்த தம்பதி
வீட்டை விட்டு துரத்தியதால் கோவில்களில் தங்குகிறோம். எனவே எங்களை தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர். மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசாரும் தங்களை மிரட்டுவதாக புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்;
வீட்டை விட்டு துரத்தியதால் கோவில்களில் தங்குகிறோம். எனவே எங்களை தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர். மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசாரும் தங்களை மிரட்டுவதாக புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் 1-ம் சேத்தி மேல தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 61). இவர், அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மேரி லலிதா(51). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.தஞ்சையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ.) அலுவலகத்துக்கு நேற்று சந்திரசேகரனும், அவருடைய மனைவி மேரி லலிதாவும் வந்தனர். அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்ய அனுமதி வழங்கக்கோரி தஞ்சை கோட்டாட்சியர்(பொறுப்பு) பழனிவேலுவிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீட்டை விட்டு துரத்தினர்
எங்களது மகளின் கணவர் இறந்து விட்டதால் அவர் குழந்தையுடன் எங்களோடு வசித்து வருகிறார். மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. சந்திரசேகரனுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ள நிலையில், அவருடைய ஓய்வூதிய தொகையை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம்.இந்த நிலையில் எங்களது மகன் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு சொத்தை எழுதி தருமாறு மிரட்டி வருகிறார். இதனால் நாங்கள் உயிருக்கு பயந்து தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 1½ மாதங்களாக வசித்து வருகிறோம். வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்துச்சென்று விட்டார்.
தற்கொலை செய்ய அனுமதி
தற்போது உடல் நிலை மிகவும் மோசமாகி வரும் நிலையில் எங்களது வீட்டைப்பூட்டி எங்களது அனைத்து ஆவணங்கள், தங்க நகைகள், ரொக்கப்பணத்தையும் மீட்டு அந்த வீட்டை மீட்டுத் தரவேண்டும் என முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.மேலும் போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் அலட்சியப்படுத்துவதோடு, எங்களை மிரட்டுகின்றனர். உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே எங்கள் வீட்டை மீட்டு எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.