திருவொற்றியூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - கணவரிடம் போலீசார் விசாரணை
திருவொற்றியூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவொற்றியூர் மேற்கு பாலகிருஷ்ணன் நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கிரேன்குமார். எலக்ட்ரீசியனான இவருடைய மனைவி மணிமேகலை (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் மகன் உள்ளான்.
தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த மணிமேகலைக்கும், கிரேன்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த கர்ப்பிணியான மணிமேகலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது கணவர் கிரேன்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.