கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: அபாய சங்கிலியில் பிரச்சினை இல்லை - ரெயில்வே விளக்கம்

எஸ்-9 பெட்டி உள்ளிட்ட ரெயிலில் இருந்த 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியுள்ளது என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-05-10 08:05 GMT

கடலூர்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25 வயது). இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22 வயது) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், அங்கு வைத்து கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டு, கடந்த 2-ந்தேதி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு சென்றனர்.

அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். வாந்தி எடுப்பதற்காக, கை கழுவும் இடத்திற்கு சென்ற கஸ்தூரி, நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரெயில் நிற்கவில்லை. அந்த அபாய சங்கிலி, வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது.

பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். எஸ்-9 பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால்தான் கஸ்தூரி இறந்ததாகவும், உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம் என்றும் உறவினர்கள் கூறியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான அறிக்கையை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், "ரெயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை. ரெயிலில் அபாய சங்கிலியில் பிரச்சினை இல்லை. எஸ்-9 பெட்டி உள்ளிட்ட ரெயிலில் இருந்த 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியுள்ளது. அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்திருந்தால் ரெயில் நின்றிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்