10 ஆண்டுக்கு பிறகு கர்ப்பம்: காலையில் பிறந்த குழந்தை... மாலையில் கணவரின் உடல் அடக்கம்

உயிரிழந்த சாரதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.;

Update:2024-05-31 02:49 IST

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சாரதி (வயது 28). இவர் கடந்த 23-ந்தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நீளமான இரும்புக்கம்பியை தூக்கியபோது மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் பட்டு உரசியதில் சாரதி மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சாரதி பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த சாரதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுவரை அவருக்கு குழந்தை இல்லாத நிலையில் தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில்தான் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சாரதி இறந்துள்ளார்.

அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று காலையில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே நேற்று மாலையில் சாரதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்