'மழையால் பாதிக்கப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் இடங்களில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டார்.

Update: 2022-10-27 17:21 GMT

ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக ஈராண்டாய்வு கூட்டம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமை செயலருமான பிரபாகர் தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, பட்டா மாறுதல், இணைப்பு பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார். மேலும் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?, மாவட்ட திட்ட பணிகள், திட்ட முன்வடிவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை

பின்னர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பேசியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 24 இடங்கள் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 56 இடங்கள் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன் நிவாரண பணிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு துறையினரும் தனித்தனியாக அவசரகால திட்டத்தை தயாரித்து வைத்திருக்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்க போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 7 மீட்புக்குழுக்களை அமைக்க வேண்டும்.

மீட்பு பயிற்சி

இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்படும் போது எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறை மூலம் பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட வேண்டும். மேலும் பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் உள்பட பலருக்கு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும். மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகு, மிதவை படகு, ரப்பர் டிங்கிகள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அணைகளில் உள்ள மதகுகள் எளிதாக திறந்து மூடும் நிலையில் உள்ளனவா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அணைப்பகுதிகளில் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவில் 24 மணி நேரமும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு வருவாய் நிர்வாக ஆணையர் பேசினார். கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்