கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-04-09 19:58 GMT

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டருக்கு முந்தைய ஒரு வாரம் புனித வாரமாகவும், புனித வாரத்திற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகவும் கடைபிடிப்பார்கள். இந்நிலையில், கடந்த 7-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை ஏசு பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், பங்குதந்தை ஜோசப் லாசர் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல், சேலம் கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேராலயத்தில் பங்குதந்தை அருளப்பன் தலைமையிலும், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத்தில் சாலமன் ராஜ் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தர்வர்கள் கலந்து கொண்டனர்.

ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி, அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம் ஆகியவற்றிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்