பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

Update: 2023-04-20 18:45 GMT

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

திருவாரூர் நகர ஐ.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் ஹாஜா மைதீன். நாகை புறவழிச்சாலை பகுதியை சேர்ந்தவர் பிரேம் நசீர். நேற்றுமுன்தினம் இவர்கள் 2 பேருக்கும் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சையில் இருந்த பிரேம் நசீரை பார்க்க சுமாா் 20-க்கும் மேற்பட்ட நண்பர்கள், உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் விஜயபுரம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் ஹக்கு மற்றும் சம்சுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் சென்றனர்.

அப்போது அங்கிருந்த பயிற்சி டாக்டரிடம் அவர்கள் பிரேம்நசீருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டனர். மேலும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

பணியை புறக்கணித்து போராட்டம்

அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணியில் இருந்த டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், ஆஸ்பத்திாி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் இருந்த டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற்றிருந்தவர்கள், உறவினர்கள் அனைவரும் ஆஸ்பத்திரி வாசல் அருகே வந்து கூடிவிட்டனர். இதனால் மயிலாடுதுறை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து 108 ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் சிறிது நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்தனர். தகவல் அறிந்த இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு வந்து கூடினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இஸ்பெக்டர்கள் ஜெகதீஸ்வரன், பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் த.மு.மு.க. முன்னாள் மாவட்ட தலைவர் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் வாகனத்தில் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது வாகனத்தை செல்லவிடாமல் இஸ்லாமிய அமைப்பினர் வாகனம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். வாகனத்தில் அழைத்து செல்லமுடியாததால் அவர்களை போலீசார் நடந்து அழைத்து சென்றனர்.

அதிகாலை 3 மணி வரை நடந்த போராட்டத்தின்போது, இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் ஆகியோருடன் ஆஸ்பத்திரி நிலைய அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்