தானியங்கி கேமராக்களை பயன்படுத்த பயிற்சி

வால்பாறையில் வனப்பாதுகாவலர்களுக்கு தானியங்கி கேமராக்களை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-17 19:30 GMT

வால்பாறை

வால்பாறையில் வனப்பாதுகாவலர்களுக்கு தானியங்கி கேமராக்களை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தானியங்கி கேமரா

வால்பாறை அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன மேலாண்மை பயிற்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள 17 வனக்கோட்டங்களை சேர்ந்த 34 வனப்பாதுகாவலர்களுக்கு தானியங்கி கேமராக்களை பயன்படுத்தும் முறை குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. உதவி வனப்பாதுகாவலர் செல்வம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். வனத்துறையின் இயற்கை வனவள பாதுகாப்பு மைய ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுராம், உலகளாவிய நிதிய மையத்தின் கள ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் விலங்கியலாளர் அன்வர் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட வனப்பாதுகாவலர்களுக்கு தானியங்கி கேமராக்களின் நவீன பயன்பாடுகள் குறித்து விளக்கினர்.

கள பயிற்சி

குறிப்பாக வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க அங்கு வாழும் விலங்குகள் எவை? என்பதை முதலில் கண்டறிந்து, அவற்றின் உயரத்தை பொறுத்து தானியங்கி கேமராக்களை பொருத்துவது குறித்து பயிற்சி அளித்தனர்.

பயிற்சியின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வனப்பாதுகாவலர்களுக்கும் தானியங்கி கேமராக்கள் வழங்கப்பட்டு அவைகளை வனப்பகுதியில் பொருத்துவற்கான கள பயிற்சியும் அளிக்கப்பட்டது. முதல் முறையாக தமிழக அளவில் வனப்பாதுகாவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2-ம் கட்ட பயிற்சி வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் வனச்சரகர் ரவி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்