நிழல் இல்லாத நாள் குறித்து செயல் விளக்கம்
சுருளிப்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே வானியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கம்பம் சுருளிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தர், மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். அதில், ஒரு ஊரில் மிகச்சரியாக சூரியன் வானின் உச்சிக்கு வருவது ஆண்டிற்கு 2 நாட்கள் மட்டுமே நிகழும். அந்த 2 நாட்களிலும் சூரியன் உச்சியில் வருகிறபோது, குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களின் நிழல் கீழே விழுவதில்லை. சூரிய ஒளி நேரே செங்குத்தாக ஒரு பொருளின் மீது விழுவதால் அப்பொருளின் நிழல் அதன் மைய பகுதியிலேயே விழும். இதனால் அதன் நிழல் வெளியே தெரிவதில்லை. இவைதான் நிழல் இல்லாத நாட்கள் என்று விளக்கம் அளித்தார்.
அதன்படி, நேற்று நிழல் இல்லாத நாள் ஆகும். இதையொட்டி சரியாக நண்பகல் 12.22 மணி அளவில் வகுப்பறைக்கு வெளியே மாணவ-மாணவிகளை வட்டமாக நிற்க வைக்கப்பட்டனர். அப்போது மாணவ-மாணவிகள் மீது சூரிய ஒளி பட்ட நிலையில், அவர்களின் நிழல் தரையில் படவில்லை. இதுகுறித்து சுந்தர் செயல் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மேகலா, ஆசிரியர்கள் தனசேகரன், ஜான்சிராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.