பவர் டில்லர்கள், களையெடுக்கும் விசை கருவிகள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
பவர் டில்லர்கள், களையெடுக்கும் விசை கருவிகள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
மானிய விலையில்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 55 கிராமங்களில் நடப்பு நிதியாண்டில் (2023-24) காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் 106 பவர்டில்லர்கள் மற்றும் 4 களையெடுக்கும் விசை கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமத்திற்கு தலா 2 வீதம் அரசு மானியத்தில் பவர்டில்லர்கள், களையெடுக்கும் விசை கருவிகள் வழங்கப்பட உள்ளது.
பவர்டில்லர்களுக்கு சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிக பட்சமாக மானியத்தில் ரூ.85 ஆயிரமும் களையெடுக்கும் விசை கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம் மற்றும் ரூ.35 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பவர்டில்லர் மற்றும் களையெடுக்கும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி வழியாக வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு, வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு மானியத்திட்டங்கள், மானியங்கள் மூலம் உள் சென்று மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்படவுள்ளது.
ஆர்வமுள்ள விவசாயிகள்
இதில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபடம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதற்பக்க நகல், சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயி சான்றிதழ், நிழற்படம் போன்றவற்றுடன் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்
செயற்பொறியாளர் (வே.பொ.), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண்: 99529 52253.
உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம் 631 502. அலைபேசி எண் 044- 24352356,
செல்போன் எண்: 90030 90440. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.