அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தனி தீர்மானம் கொண்டு வர தீவிரம்
ஒற்றை தலைமையில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தனி தீர்மானம் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறார்கள்.;
ஒற்றை தலைமை விவகாரம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் முக்கிய விவாத பொருளாக இருக்கப்போகிறது.
தற்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட 12 பேர் அடங்கிய குழுவில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 9 பேர் உள்ளனர். எனவே அவர்கள், இந்த தீர்மானத்தை ஒற்றை தலைமை தீர்மானத்தை திணித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான முயற்சியை முன்னெடுத்தனர்.
தனி தீர்மானம்
அ.தி.மு.க.வில் தன்னை ஓரம்கட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கும் தகவல் ஓ.பன்னீர்செல்வம் காதுக்கு வந்ததால் அவர் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தார். இதை அவரே கடந்த 16-ந் தேதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.
அ.தி.மு.க. தீர்மான குழு ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் 2 முறை கலந்துகொண்டார். அப்போது அவர், 'ஒற்றை தலைமை தீர்மானம் இருந்தால் அதில் நான் நிச்சயம் கையெழுத்திட மாட்டேன்' என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 18 தீர்மானங்களில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து இந்த தீர்மான பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட முன் வந்துள்ளார்.
அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானத்தை பொது தீர்மானமாக இல்லாமல் தனி தீர்மானமாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலைகளில் அவர்கள் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.
பதற்றம், பரபரப்பு
அ.தி.மு.க.வில் 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் சரிசமமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே ஒற்றை தலைமைக்கான தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சினை ஏற்படும். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தற்போதே பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை
இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பசுமை வழி சாலையில் உள்ள தங்கள் வீடுகளில் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் 5-வது நாளாக நடந்து வரும் இந்த பிரச்சினை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், டி,ஜெயகுமார், தங்கமணி, மோகன், சிவபதி, பி.வி.ரமணா, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், முக்கூர் சுப்பிரமணியன், தளவாய்சுந்தரம், சின்னையா, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி. உள்பட பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
செல்லூர் ராஜூ
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிசாமியின் மனநிலையை அறிந்து விட்டு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விளக்கம் அளித்து உள்ளார்.
இருபக்கமும் சமரச தூதராக அவர் சென்று வந்தார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.
விவாதம் நடைபெறவில்லை
இந்தநிலையில் அ.தி.மு.க .தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடனான கூட்டத்தை முடித்துக்கொண்டு தீர்மானக்குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட 17 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் காண்பிக்கப்பட்டது. அதனை அவர் பார்வையிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் எதுவும் பேசவில்லை. தீர்மானக்குழு ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து எவ்வித விவாதமும் நடைபெற்றதாக தெரியவில்லை.
நேற்று நடைபெற்ற தீர்மானக்குழு ஆலோசனை கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்ட தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டம் முடிந்து வெளியே வந்த தீர்மானக்குழு உறுப்பினர் வைகைசெல்வன் கூறும்போது, "செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாக முடிவு செய்யப்பட்ட பின்னர் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.