ஒரு லட்சம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

ஒரு லட்சம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

Update: 2022-09-16 17:04 GMT

பல்லடம்

பல்லடம் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை விசைத்தறியாளர்கள் தொடங்கி உள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம்

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று முதல் கோவை- திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்கத்தைச் சேர்ந்த கோடங்கிபாளையத்தில் 6,500 விசைத்தறிகள், பருவாய் ஊராட்சி பகுதியில் 2ஆயிரம் விசைத்தறிகள் என 8,500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது:-

கோவை, திருப்பூர், மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

முழுவிலக்கு

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பஞ்சு நூல் விலை உயர்வு, கூலி உயர்வு என அடுத்தடுத்த பிரச்சினைகளால் விசைத்தறி தொழிலில் கடுமையான பாதிப்புகளை சந்தித்தோம். ஜவுளி உற்பத்தியாளர்களிடம், கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து வரும் விசைத்தறிதொழிலில் மாதம் ரூ.25ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும். இதில் ரூ.10 ஆயிரம் வரை மின் கட்டணத்துக்கே சென்றால் எவ்வாறு குடும்பம் நடத்தமுடியும். எனவே சாதாரண விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்ப பெற்று விசைத்தறிக்கு முழு விலக்கு அளித்து விசைத்தறி தொழிலையும், இதை நம்பியுள்ள பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களையும், சார்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அரசு காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறிகளை நிறுத்தி வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உற்பத்தி பாதிப்பு

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று காலை முதல் விசைத்தறிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொருளாளர் பூபதி கூறுகையில்" சோமனூர் சங்கத்தில் 9ஆயிரம் பேர் சங்க உறுப்பினர்களாக உள்ளனர்.அதில் திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரூ. 25கோடி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்