பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது
பூம்புகார் அருகே பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.;
திருவெண்காடு:
பூம்புகார் அருகே சாயாவானம் மற்றும் சம்பா கட்டளை பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென வீசிய பலத்த காற்றால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டதால் பூம்புகார், வானகிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கின. இதுகுறித்து மணி கிராமம் ஊராட்சி உறுப்பினர்கள் வாணி, கனகராஜ் ஆகியோர் பூம்புகார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்வாரிய உதவி பொறியாளர் தினேஷ், ஆக்க முகவர் சேகர் ஆகியோர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந் அறுந்த மின்கம்பிகளை சீரமைத்தனர். இந்த பணியில் இரவு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு அதிகாலையில் மின்வினியோகம் வழங்கினர். நள்ளிரவு நேரத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.