நெற்பயிர்களை உரசி செல்லும் மின் கம்பிகள்

திருமருகலில் மின்கம்பம் சாய்ந்ததால் நெற்பயிர்களை மின்கம்பிகள் உரசி கொண்டு செல்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-13 17:21 GMT

திட்டச்சேரி:

திருமருகலில் மின்கம்பம் சாய்ந்ததால் நெற்பயிர்களை மின்கம்பிகள் உரசி கொண்டு செல்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஏக்கர் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30 ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் திருமருகல் துணை மின் நிலையத்தில் இருந்து வயல்வெளி வழியாக கட்டலாடி, கீழப்பூதனூர் பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான வயல்களின் நடுவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உரசி செல்லும் மின்கம்பிகள்

இந்த மின்கம்பங்கள் சாய்ந்ததால் உயர் அழுத்த மின்கம்பிகள் நெற்பயிர்களை உரசும் அளவிற்கு தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு வந்து நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.

அறுவடை எந்திரங்கள் மூலம் வயல்களில் அறுவடை பணியில் ஈடுபட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் மின் கம்பிகளை கடந்து செல்ல ஆபத்தான முறையில் கீழே தவழ்ந்து சென்று வருகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனித்து ஆபத்தான முறையில் நெற்பயிர்களை உரசி செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்