வட சென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
வட சென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தநிலையில், முதல் யூனிட்டில் 3-வது அலகில் நேற்று முன்தினம் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது முதல் யூனிட்டில் 3-வது அலகில், ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு இன்று மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 110 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணி தொடங்கிய நிலையில் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரித்து தனது முழுத் திறனை அடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.