இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சென்னை மேடவாக்கத்தில் இரவு நேர மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து புகார் அளிக்க வந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;
சென்னையை அடுத்த மேடவாக்கம் சி.பி.ஐ.காலனி, பாபு நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் அழைப்பை யாரும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிலர் மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக புகார் அளிக்க சென்றுள்ளனர்.
ஆனால் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் யாரும் இல்லை. அலுவலகத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள் போன் ரிசிவரை எடுத்து கீழே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர் அலுவலகத்துக்கு வந்த தற்காலிக ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.