அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி

திருவாரூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-06-21 16:22 GMT

திருவாரூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அறிவிக்கப்படாத மின்தடை

திருவாரூர் பகுதியில் கோடை வெயில் கடந்த சில மாதங்களாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்க மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டியின் தேவை உள்ளதால் மக்கள் மின்சாரத்தை அதிகம் நம்பி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் எந்தவித மறு அறிவிப்பும் இன்றி மின்சார நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடர்ந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

மக்கள் கோரிக்கை

திருவாரூர் நகர், சேந்தமங்கலம், வண்டாம்பாளை, நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. அனைத்து தொழில்களுக்கும் ஏதோ ஒரு வகையில் மின்சார தேவை இருந்து வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்தடையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எந்தவித பராமரிப்பு பணிகளை மேற்கொண்டாலும், மின்சார நிறுத்தம் குறித்து உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும் மின்வாரியத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்