தீ விபத்தில் கார் சேதமானதற்கு இழப்பீடு வழங்காததால் மின்வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள் விழுப்புரத்தில் பரபரப்பு
தீ விபத்தில் கார் சேதமானதற்கு இழப்பீடு வழங்காததால் மின்வாரிய அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூரை சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் தனக்கு சொந்தமான காரை கடந்த 8.6.2015 அன்று வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பம் திடீரென சாய்ந்து கார் மீது விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
அந்த காருக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் கொளஞ்சி, இன்சூரன்ஸ் செய்திருந்ததால் காருக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 508-ஐ சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் கொளஞ்சியின் மனைவி சாந்திக்கு வழங்கியது. ஆனால் அந்த இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திடம் இருந்து பெறுவதற்காக இன்சூரன்ஸ் நிறுவனம் பலமுறை அணுகியபோதிலும் மின்வாரிய அலுவலகம், இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கவில்லை. இதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இழப்பீட்டு தொகை
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விழுப்புரம் மின்வாரிய அலுவலகம் இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 508-ஐ வழங்க வேண்டுமென 11.7.2018 அன்று உத்தரவிட்டது.
ஆனால் மின்வாரிய அலுவலகம் இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் இன்சூரன்ஸ் நிறுவனம் நிறைவேற்று மனுதாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்தை மின்வாரிய அலுவலகம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் அந்த தொகைக்கு ஈடாக மின்வாரிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் கோர்ட்டு மூலம் ஜப்தி செய்யப்படும் என்று 1.8.2022 அன்று உத்தரவிட்டார்.
ஜப்தி நடவடிக்கை
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் மின்வாரிய அலுவலகம் இழப்பீட்டு தொகையை செலுத்தாததால் அந்த தொகைக்குரிய பொருட்களை ஜப்தி செய்வதற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் வக்கீல்கள் தனராஜன், ராஜகுமாரன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதல், பராமரித்தல் பிரிவு) அலுவலகத்திற்கு வந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மின்வாரியத்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இழப்பீட்டு தொகையை வழங்க 10 நாட்கள் காலஅவகாசம் தரும்படி கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட இன்சூரன்ஸ் நிறுவன வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், ஜப்தி முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.