கொட்டி தீர்த்த மழை; மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. கொடைக்கானலில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2022-07-31 23:43 IST

கொட்டி தீர்த்த மழை

திண்டுக்கல்லில் இன்று காலையில் இருந்தே கடுமையான வெயில் கொளுத்தியது. இதற்கிடையே மாலையில் வானத்தில் கருமேக கூட்டங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் வரை கொட்டியது. அதன் பின்னரும் விட்டு விட்டு இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் நாகல்நகர் மற்றும் நேருஜிநகர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேநேரம் திண்டுக்கல் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.‌

பழனி

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. இன்று மாலை 7.30 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு திண்டுக்கல் ரோடு, பூங்கா ரோடு, ஆர்.எப். ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

40 மி.மீட்டர் மழை

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை அப்சர்வேட்டரியில் 40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இன்று பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. மாலை 5 மணி முதல் இரவு வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. வில்பட்டி செல்லும் மலைப்பாதையில் வேட்டுவரை என்னுமிடத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அதேபோல கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் 3 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் நகர் பகுதி இருளில் மூழ்கியது.

மேல்மலை கிராமங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பேரிடர் மீட்பு படையை மலைப்பகுதியில் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்