காவேரிப்பட்டணம்:-
காவேரிப்பட்டணம் அருகே ேமாட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கோழி நிறுவன மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார்.
கோழி நிறுவன மேற்பார்வையாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜமேதர் மேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் பிரசாந்த் (வயது 25). இவர், கிருஷ்ணகிரி அருகே தனியார் கோழி ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு தர்மபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கோழியை இறக்கி வைத்து விட்டு கிருஷ்ணகிரியை நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
கார் மோதி பலி
காவேரிப்பட்டணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வந்த போது, பிரசாந்தின் மோட்டார் சைக்கிளின் பின்புறமாக கார் மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியாகி கிடந்த பிரசாந்த் உடலை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரசாந்த் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி சென்ற கார் டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.