விழுப்புரம் அருகேகுறியீடுகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது

விழுப்புரம் அருகே செ.கொத்தமங்கலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-03-26 18:45 GMT


விழுப்புரத்தை அடுத்த பேரணி அருகே உள்ளது செ.கொத்தமங்கலம் கிராமம். இங்கு சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால வரலாற்றுத்தடயங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், மேற்பரப்பாய்வில் ஈடுபட்டார். அப்போது குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு ஒன்றை கண்டெடுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் புதைவிடமாக இருந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இங்கு காணப்படுகின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள கருப்பு, சிவப்பு பானை ஓட்டில் குறியீடுகள் காணப்படுகின்றன. இதனை ஆய்வுசெய்த மூத்த தொல்லியலாளர் துளசிராமன், "இக்குறியீடுகள் மலை அல்லது வாழ்விட கூடாரங்களை குறிப்பிடுவதாக இருக்கிறது. இவை சங்ககால காசுகளிலும் காணப்படுகின்றன. எனவே இந்த பானை ஓடும் சங்ககாலத்தை சேர்ந்தது" என்று தெரிவித்து இருக்கிறார்.

பாதுகாக்க வேண்டும்

செ.கொத்தமங்கலம் பகுதியிலுள்ள தொல்லியல் தடயங்கள் பெரிதும் சிதைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய வரலாற்று தடயங்களை பாதுகாக்க வேண்டும் என்று கடந்த 2019-ல் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். இதனைத்தொடர்ந்து 2020 ஜனவரியில் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரி பாஸ்கர், இதுபற்றி அரசுக்கு அறிக்கையும் அனுப்பியிருந்தார். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கிராமத்தில் உள்ள தொல்லியல் தடயங்களை பாதுகாக்க தொல்லியல் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்