பொத்தகாலன்விளைபுனித திருக்கல்யாண மாதா தேரோட்டம்

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Update: 2023-01-24 18:45 GMT

தட்டார்மடம்:

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

திருவிழா கொடியேற்றம்

தட்டார்மடம் அருகே பொத்தகாலன்விளையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல அதிபர் வெனிசுகுமார், தூத்துக்குடி பங்குத்தந்தை சேவியர் அருள்ராஜ் ஆகியோர் கொடியேற்றினர். தொடர்ந்து ஜெபமாலை, அருளுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

விழா நாட்களில் நவநாள் திருப்பலி, அருளுரை, ஜெபமாலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஆலயத்தில் நடைபெற்றது.

மலையாள திருப்பலி

நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை 4.30 மணிக்கு நெய்யாற்றங்கரை அருட்தந்தை பால் தலைமையில் மலையாள திருப்பலியும், அருட்தந்தை அருள்செல்வன் தலைமையில் திருத்தல பெருவிழா திருப்பலியும் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன், மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கு பெற்ற ஜெபமாலை, திருப்பலி நடந்தது.

காலை 10 மணிக்கு புதுநன்மை வழங்குதலும், மதியம் 12 மணிக்கு தமிழ் திருப்பலியும் நடைபெற்றது.

தேர் பவனி

மாலையில் அருளுரை, தேர் பவனி, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 11 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று முதல் நாளை (வியாழக்கிழமை) வரை மாலை 6 மணிக்கு தேரடி திருப்பலி, செபஸ்தியார் நாடகம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வெனிசுகுமார் தலைமையில் தோழமை பங்குத்தந்தை ஜேசுராஜ் மற்றும் பங்கு மக்கள், அருள் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்